பிம்பங்களின் அரசியல் /எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை/பாலமுரளிவர்மன்

                                 பிம்பங்களின் அரசியல்                 

                                            எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை

                                                                                                   -பாலமுரளிவர்மன்

 அரசியல் இழிசெயல் அல்லஇழிசெயல்கள் எல்லாம் அரசியல் ஆகாது.                                                                                    மனிதர்கள் தங்களுக்குள்ளாக இழைத்துக் கொள்ளும் தீங்குகளையெல்லாம் அரசியல் என சுட்டுவதாலேயே,                                 கெட்ட வார்த்தைகள் என்று சொல்லப்படும் சொற்கள் பொதுத்தளத்தில் உருவாக்கும் முகச்சுளிப்புக்கும் மேலாக அரசியல் எனும் சொல்லாடல் குடும்பங்களுக்குள்ளும் சமூகத்திலும் வெறுப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதே வேளை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் தமிழ் நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் ஆற்றலாகவும் தலைமைகளை உருவாக்கியளிக்கும் தொழிற்சாலையாகவும் சினிமா, மிகுந்த விருப்பத்திற்கொன்றானதாக இருந்து வருவதையும் நாம் சற்றுக் கூர்ந்து கண்ணுற வேண்டியிருக்கிறது

இருபெரும் பிரம்மாண்டங்கள் குறித்து ஒரு கட்டுரையில் தீர ஆராய்ந்துவிடமுடியாது. எனினும் சினிமா, அரசியல் இரண்டுமே மக்களுக்கானதாக இருந்தாலும் முழுமையும் மக்களுக்குப் பயன்படுகிறதா? என்ற கேள்வியோடு இதை அணுகலாம்.   

வலிமையான ஊடகம் என்று எல்லாராலும் சொல்லப்படுகிற திரைப்படம், மக்களைப் பொறுத்தவரை மகிழ்வளிக்கும் சாதனமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மாற்றத்திற்கான கருவியாகவும் பயன்படுத்த வாய்ப்புள்ள அவ்வூடகம் யாருடைய கைகளில் இருந்ததோ அவர்களின் நோக்கத்திற்கேற்ப மாற்றத்தை விளைவித்திருக்கிறது. அவ்விளைவுகளின் தொடர்ச்சிதான் கட்சி அரசியலுக்கும் திரைப்பட பிம்பத்தால் உயரம் பெற்ற நடிகர்களுக்குமான இணைப்பையும் பிணக்கையும் மையப்படுத்தியிருக்கிறது. முன்பாக, தொடக்கக் காலத் திரைப்படங்களில் சமூக அரசியல் நிலை படம்பிடிக்கப்பட்டிருந்தமை குறித்துச் சுருக்கமாக நினைவூட்டுவது இக்கட்டுரையின் மையப்பொருளுக்கு உதவும்

1917 அல்லது 1918-ல் முதல் மௌனப்படமாக கீசகவதம் வெளியாகியது எனும் அடிப்படையில் தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு நிறைவடைந்திருக்கிறது. 1916-ல் கீசகவதம் வெளியானதாக இதுவரை சொல்லப்பட்டது. ஆனால் தென்னிந்தியாவின் முதல் திரைப்படத்தை உருவாக்கிய தமிழர், திரு நடராஜ முதலியார் அவர்கள் தமது Indian Cinema company established in 1917 என்று தமது Letterpad ல் குறிப்பிட்டிருந்ததோடு 1917 இறுதி அல்லது 1918-ல் கீசக வதத்தை வெளியிட்டதாக 1970-ல் தமது 84வது வயதில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்

     திரைப்படம் தமிழ்ப் பேசத்தொடங்கிய 1931 முதல் இன்றுவரை வலுவான அரசியல் தொடர்பு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆயினும் தொழில்நுட்ப வளர்ச்சியில் எட்டியிருக்கிற உச்ச நிலையை உள்ளடக்கங்களில் எட்ட முடிந்திருக்கிறதா என்றால் பெரும் தேக்கநிலை தென்பட்டிருப்பதைக் காண முடிகிறது.             

வெள்ளை ஏகாதிபத்திய அரசின் தணிக்கைத்துறை தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருந்தபோதே சமூக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக 1936-ல் பாலமோகினி, சந்திரமோகன், 1939ல் தியாகபூமி, ஜெயக்கொடி, 1940-ல் குழந்தை கல்யாணம், 1947-ல் நாம் இருவர் 

ஆகியவற்றைச் சொல்லலாம். அதிலும் 1939-ல் வெளியான தியாகபூமி முக்கிய முயற்சியாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியை நேரடியாக எதிர்க்கும் முழக்கம் முன் வைக்கப்படவில்லை என்றாலும் காந்திய நடவடிக்கைகளை வலுவாக பரப்பியதாலும் வெள்ளையர் ஆட்சிக்கெதிரான தேசபக்தர்களின் மறியலில் கதைநாயகிப் பங்கெடுத்து சிறைச் செல்வதுபோலும் சித்தரிக்கப்பட்டு இந்திய விடுதலைக்கு நெருப்பூதும் வேலையை செய்ததால் பிரிட்டிஷ் அரசால் தியாகபூமித் தடை செய்யப்பட்டது. அடுத்தடுத்து சில தயாரிப்புகளும் முடக்கப்பட்டதால் புராணக்கதைகளையே படமாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது திரைப்படத்துறை.

கும்பகோணத்திலிருந்து புறப்பட்ட கே.சுப்ரமணியத்தினுடைய வருகை மிக நுட்பமான சீர்திருத்தக் கருத்துகளைப் பதிவு செய்திருப்பதை பார்க்க முடிகிறது

தமிழ்த் திரைப்படங்களை அரசியல்படுத்தியதில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்

அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்கவாசல், நல்லதம்பி, கலைஞர் கருணாநிதியின் பராசக்தி, மந்திரிகுமாரி, மனோகரா உள்ளிட்ட படங்களில் சமூக நடைமுறையில் காணப்பட்ட சீர்கேடுகளையும் ஏழை எளிய மக்களுக்கு எதிராக நிலவிய ஒடுக்குமுறைகளையும் பற்றிய கருத்துருவாக்கங்களாக வெளிப்பட்டமை தமிழ்த்திரையில் ஒரு மறுமலர்ச்சிக்கு வித்திட்டது

சுயமரியாதை இயக்கத்திற்கும் குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகத்தின் திராவிடக் கொள்கை மற்றும் சாதி எதிர்ப்புக் கோட்பாடுகளுக்குச் சாதகமான எழுச்சியை ஏற்படுத்தியதையும் அவர்களது படைப்புகளில் சமூகம், அரசாங்கம் என்கிற இரண்டு மையங்களில் அடக்குமுறை அம்சங்கள் வெளிப்பிட்டமையால் அவர்களது அமைப்பின் கொள்கை விரிந்த அளவில் பரவி பெரும்பகுதி மக்கள் தத்தமது அரசியல் மற்றும் சமூக நடைமுறைகளைத் திருத்தி அமைத்துக் கொண்டார்கள்என்று ஆய்வறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுகிறார்

திரைப்படத்தின் எல்லைகளுக்கு அப்பாலான வீச்சு நன்மைகளையும் தீமைகளையும் உள்ளடக்கியதாகவே இருந்து வந்திருப்பதை உணரமுடிகிறது. இவ்விடத்தில் ராஜாஜி மற்றும் ஈ.வெ.ரா ஆகியோரது கருத்துகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும்

1949-ல் திமுக தோற்றுவிக்கப்பட்டபோது ஈ.வெ.ரா அதை கூத்தாடிகளின் கட்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்.                                 ராஜாஜியோ சினிமா, தமிழ் மக்களின் முதலாம் பொது எதிரி. சினிமா துறையினர் உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டால் அது சமூகத்துக்கு செய்யும் சேவையின் அறிகுறியாகும் என்றார்

ராஜாஜியின் கூற்று எதனடிப்படையில் அமைந்திருக்கும் என்பதை நம்மால் யூகிக்கமுடிகிறது. வர்ணாசிரம பேதங்களைக் களைந்தெறிவதில், அவற்றை எளியமக்கள் உணரும் வகையில் அடையாளப்படுத்துவதில் திரை உலகம் மகத்தான பணியைச் செய்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. சமூகச்சமன்பாட்டைச் சாத்தியப்படுத்தியதில் திரையரங்குகளின் வாயிலாக திரைப்படம் எனும் கருவி பெரும் வெற்றியை ஈட்டியிருப்பது மாபெரும் சாதனை

ஆதிக்கச் சாதியினரோடுச் சமமாக உட்கார்ந்துப் பேசமுடியாத நிலையிலிருந்தவர்களையும், அவர்களது தெருக்களில் நடமாட முடியாமலிருந்தவர்களையும் சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லாரும் சமமாக கூடும் அருகருகே சமமாக  அமரும் வாய்ப்பை பெற்றுத் தந்த வகையில் சினிமா மானுட சமூகத்துக்கு கிடைத்த வரமாகிறது

அறிவியல் கண்டுபிடிப்புகளை எதிர்த்த கூட்டம் எப்போதும்போல பில்லிசூன்யம் போன்று சினிமாவும் கொடுமையானது என்று சாடியதும் ராஜாஜியின் கூற்றும் அந்தக் கால அளவில் நமக்கு ஏற்புடையதாக இல்லை. ஆனால் இன்று சினிமாவால் தமிழ்நாட்டில் விளைந்திருக்கும் அரசியல் கேடுகளை பார்க்கும் போது மேற்சொன்ன சாடல்கள் சரிதான் எனும் எண்ணம் வருகிறது. ஈவெ.ராவின் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக அண்ணாவின் கணக்கு நமக்கு கிடைக்கிறது. ராமச்சந்திரன் முகம் 30,000 வாக்குகளைக் கொண்டு வரும். அவரே நேரே வந்தால் 50,000 பேரைக் கொண்டு வர முடியும் என்று எம்.ஜி.ஆர் தி.மு..வில் இருந்தபோது அண்ணா சொன்னதாக கூறப்படும் சொற்றொடரில் தொடங்கியிருக்கிறது பிம்பங்களின் அரசியல்

சினிமா, சாதி அமைப்பின் மீது தாக்குதல் தொடுத்து வைதீக மரபுகளைக் கேள்விக்குள்ளாக்கியது. நிலப்பிரபுத்துவ ஆதிக்கமுறையின் கொடுமைகளைக் காட்சிப்படுத்தியது. ஆண்டான் அடிமைமுறை ஒழிய அச்சாரமிட்டது. சாதி மறுப்புத் திருமணங்கள் பரவலாக நிகழ விதையிட்டது. மூடநம்பிக்கைகளை வெளிச்சம் போட்டது. இவையெல்லாம் முற்போக்கு சக்திகளின் வரவால் சினிமா உள்வாங்கிக் கொண்ட கருத்தியல் உள்ளீடுகளால் சாத்தியமான காட்சி வெளியீடுகள். ஆனால் கதையின் நாயகர்கள், வீரதீர சாகசங்கள் செய்யும் அசகாய சூரர்களெனும் நாயகபிம்பத்தில் சிக்குண்டபிறகு அந்த பிம்பத்தை நிலைநிறுத்த முயன்றவர்களின் தலையீடுகளால் தடுமாற்றம் தொடங்கியது. பிரிட்டிஷ் அரசின் தணிக்கைத் துறையின் தலையீட்டால் புராணக்கதைகளின் பக்கம் திரும்பியது போல தமிழ் சினிமா முற்றாகத்  தடம் புரண்டது

எம். ஜி. ஆர் முதல் விஜய் வரை 

எம்.ஜி.ஆர், தனது படங்களிலும் பாடல்களிலும் நல்ல கருத்துகளைப் பரப்பினார்நேர்மையானவராக, ஊழலுக்கும் அநியாயத்துக்கும் எதிரானவராக தனது பிம்பத்தைக் கட்டமைத்தார். அடித்தட்டு மக்களின் நேர்மறைத் தன்மையைக் கிளர்ந்தெழச் செய்து அவர்களது தன்னம்பிக்கையைத் தூண்டி நிலையான நம்பிக்கையைப் பெற்றார் என்பதையெல்லாம் கடந்து இன்னுமொரு கோணத்தில் அணுகினால், விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி சமூக அரசியல் ஆய்வு நோக்கில் சிந்தித்தால் இன்றைக்குத் தமிழகம் எதிர்கொள்ளும் இழிநிலைக்கு எம்.ஜி.ஆர். விதைநெல்லாக இருந்திருக்கிறார் 

என்பது புலப்படுகிறது. அவரது வெற்றிக்கு இந்நாள் வரை அவரே காரணம், அவரது குணநலன்களே காரணம் என்று பின்னப்பட்ட கதைகளைக் களைந்துவிட்டு தமிழ் மக்களின் உளவியல் கூறுகளையும் கவனத்தில் கொண்டால்  எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு அவரது உழைப்போடு, தமிழ்மக்களின் எளிய மனமும் அடிப்படையாக இருந்தது என்பது  தெளிவாகும். அவ்வாறே இன்றைய தமிழ்நாட்டு  அரசியல் நிலைக்கு எம்.ஜி.ஆர் விதை நெல்லாயினும்,  பகுத்தறியும் பார்வையைக் கைக்கொள்வதைக் காட்டிலும் பார்வையை மறைக்கும் உணர்ச்சி மேலிடும் உள்ளத்தைக் கொண்ட பேரினமாகத் தமிழினம் வளர்க்கப்பட்டிருப்பதும் காரணமாகிறது

திரைப்படங்களின் வழியே தி.மு.க ஏற்படுத்திய தாக்கம் அதன் வெற்றிக்குச் சமபங்கு வகித்ததுபோலவே திரைப்படத்தின் வாயிலாகவும் தி.மு.க வழியேயும் நட்சத்திரக் குறியீடாக உருவான எம்.ஜி.ஆரின் பிம்பமே திமுகவை வீழ்த்தவும் எம்.ஜி.ஆரை உயர்த்தவும் செய்திருக்கிறது. காரணம், தமிழ்த்திரைப்படங்களின் மிக முக்கியமான சமூகத்தாக்கமென்று குறிப்பிடும்போது, தொலைக்காட்சி யுகத்திற்கு முன்பாக தமிழ்ப்படங்களின் வெற்றி பெண்களாலேயே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நடுத்தர மற்றம் அடித்தட்டுப் பெண்களிடையே ஆழமாக வேரூன்றிய திரைப்படமோகம் அவர்களுக்கு பாரிய ஆற்றுப்படுத்துதலை அளித்திருக்கிறது. இதனுடாகவே எம்.ஜி.ஆரின் வெற்றி நிர்ணயமாகியிருக்கிறது. இங்கு எம்.ஜி.ஆர் எனும் நடிகர் தனக்குத்  தானே கட்டமைத்துக் கொண்ட பிம்பம் அவருக்கு கைகொடுத்தது.  

காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்கிற பெருமித வெளிப்பாட்டை சற்று ஆராய முனைந்தோமானால்நமது பண்பாடு  பெரும்பாலும் உணர்ச்சிமயப்பட்டிருக்கிறது என்கிற உண்மை நமது பொட்டில் அறைகிறது.                                         

காதலும் வீரமும் உணர்ச்சி விளைவுகள். தமிழர் வாழ்வில் கலை வடிவங்கள் கொட்டிக்கிடப்பதற்கான காரணமும் அதுதான்கலையின் எல்லாவித வடிவங்களையும் கண்டடைந்து வளர்த்தெடுத்த சமூகமாக தமிழ்ச்சமூகம் இருப்பதன் அடிப்படையும் அதுவே.கலை என்பது உணர்ச்சி வெளிப்பாட்டையே முதன்மையானதாகக் கொண்டிருந்தமையால் அதன் உள்ளடக்கமும் அவ்வகைப்பாட்டிலேயே பயணித்து வந்திருக்கிறது.

சமூக அக்கறை, சமூக கோபம் என்பதான பதங்களும் உணர்ச்சியுள்ள மனிதனுக்கே பொருந்தக் கூடியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இவ்வித வெளிப்பாட்டுத்தளத்திலிருந்து அரசியலை அணுகுவது அறிவுடைமை ஆகாது என்கிற பட்டறிவு இன்றி அரசியலும் அவ்வாறே அணுகப்படுவதும்,அதற்கான நிர்ப்பந்தங்கள் பிம்பங்களை கட்டமைப்பதன்  வழியே   தொடர்ந்து எளிய மக்கள் மீது திணிக்கப்படுவதாலுமே, ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்வோடு பிணைந்திருக்கிற அரசியலை அம்மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி நமது சிக்கல்களைத் தீர்க்க, வீரதீர சாகசங்கள் அறிந்த அசகாய சூரர்களால் மட்டுமே முடியும் என்று நம்ப வைத்து  அப்படி ஒருவனை திரையரங்க இருட்டில்  தேடிக்கண்டடைவதோடு நமது கடமை முடிந்துவிடுகிறது,நமக்கும் அரசியலுக்கும் வேறெந்த தொடர்புமில்லை என்கிற முடிவுக்கு வரச்செய்து விடுகிறது

இன்றைக்கு சமூகவலைத்தளங்களில் வெளிப்படும் கருத்துகள் முழுமையும் ஆக்கப்பூர்வமாக இல்லையென்றாலும் அரசியல் குறித்து பேசப்படுவதே முன்னர் இருந்த நிலையிலிருந்து திமிறி எழுந்து உருவான பெரும் மாற்றம்தான். கட்டுரையின் தொடக்க சொல்லான கெட்ட வார்த்தைக்கு ஒப்பாக அரசியல் கருதப்பட்ட இந்த சமூகத்தில்தான் தலைவர்கள் திரையரங்க இருட்டிலிருந்து உருவானார்கள். சமூகம் இருட்டில் விழத் தொடங்கியது

நம்மால் எதையும் மாற்றிவிட முடியாது. நம் நாயகனால்தான் முடியும் என்பதான எளிய மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவே பிம்பங்கள் கட்டமைக்கப்படுவதும், ஏற்கனவே வெற்றிகரமாக உருவாகியிருக்கிற பிம்பங்களை பயன்படுத்துவதுமான பிம்பங்களின் அரசியல் அரங்கேறுகிறது

திட்டமிட்டு கட்டமைக்கப்படும் பிம்பமானது, தனித்த ஆளுமையோடு சித்தரிக்கப்படும் ஒரு மாயவாத மேல்நிலையாக்கலுக்கு உள்ளாக்கப்பட்ட, நடைமுறை வாழ்வுக்கு அப்பாற்பட்ட அதிநாயகத் தன்மையுடன் ஒரு நபரை முன் நிறுத்தி அவர் மீது கேள்விகளுக்கு அப்பாலான அதீத கூட்டுணர்வையும் அச்சத்தையும் குவித்து வெகு மக்களை நம்பச் செய்கிறது. எடுத்துக்காட்டாக பிரதமர் மோடியை சொல்லலாம். மோடி, அரசியலுக்காக முன்னிறுத்தப்பட்ட பிம்பம். ஆனால் திரைப்பிம்பம் முன்னிறுத்திய அதிநாயக பிம்பமான எம்.ஜி.ஆர்பண்பாட்டுத்தளத்திலும் ஒரு பிரக்ஞையற்ற முன்னிறுத்தலை தொடங்கிவைத்தார்அதற்கு சினிமா அவருக்கு நல்வாய்ப்பாக பயன்பட்டது.

எடுத்துக்காட்டாக 1984-ல் பொதுத்தேர்தலின் போது நோய்வாய்ப்பட்டிருந்த, எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாது பேச முடியாத நிலையில் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபோதும் தேர்தலில் வென்று முதலமைச்சரானார் என்பதை ஒரு தனி மனிதருக்கான பெருமையாக எம்.ஜி.ஆருக்கான தகுதியாக சொல்லிச் சொல்லிப் பழக்கப்படுத்திவிட்டார்கள். அரசியல் நோக்கிலும் பண்பாட்டுத் தளத்திலும். அதை எம்.ஜி.ஆருக்கான பெருமையாக மட்டும் பார்க்க முடியாது. தமிழ்த்தேசத்தில் , தமிழ்ப் பேசி வாழுகின்ற மானுட சமூகத்தின் அன்பும் பெருங்கருணையுமான வெளிப்பாடு அது.

எம்மக்களின்எளியமனமும்இரக்ககுணமும்தமதுஅரசியல்அறியாமையைகவனத்தில்கொள்ளவில்லை. பாச உணர்ச்சியில் கட்டுண்டு கிடக்கிற மனப்பாங்கு அவர்களுடையது. அப்பாங்கு, உணர்ச்சிக்கு முதலிடமும் அறிவுக்கு இடமின்மையுமாய் வளர்ந்தது. அதை திரைப்படத்தின் மூலமாக எளிதில் தம் வசப்படுத்திக் கொண்டார்கள். அதுவே, ஆட்சி செய்வதற்கும் அரசு நிர்வாகத்தை மேற்கொள்ளவும் உடல், மன ஆரோக்கியம் கொண்ட ஒருவரால்தான் முடியும் என்கிற நடைமுறை உண்மையை புத்திக்கு புகட்டாமல், புலப்பட்டாலும் கண்களை மறைக்கும் தனிமனித பிம்பத்தை கேள்விக்கு அப்பாற்பட்டு போற்றித் தொழும் கண்மூடித்தனமான நம்பிக்கையை விதைத்தது.

குடும்ப அமைப்பிலும், சமூகத்திலும் பெண்களின் உழைப்பும் பங்களிப்பும் அளப்பரியதாக இருந்தாலும் பெண்களுக்கு வழங்கப்பட்ட வேண்டிய உரிமைகளும் மரியாதையும் மறுக்கப்படும் வேளை, தாய் என்ற புனிதப் பிம்பமாக பெண்ணை கட்டமைத்துப்  போற்றும் பாசாங்கும் அந்த உரிமை மறுத்தலை மறைக்கக் கைகொடுக்கிறது. அதைப் போலவே மக்களின் அறியாமையை போக்காது தன் நலத்துக்காக பயன்படுத்திக் கொள்ள நாயகப் பிம்பம் கைகொடுக்கிறது

அத்தகையப் பாசாங்குப் புனிதத்தின் நீட்சியாகவே எம்.ஜி.ஆர் உடல் நலிவுற்ற நிலையிலும் தேர்தவில் வென்றதை பார்க்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாகவே கடந்த 2015-ம் ஆண்டு அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பின்னர் தொடங்கி இறுதிவரை நடந்தேறிய  நாடகக்காட்சிகளை தமிழ் மக்கள் தமக்கு எந்த தொடர்புமில்லாததுபோல ஏற்றுக்கொண்டு வாழப்பழகிவிட்ட  நிலை. தமக்கான ஆட்சித் தலைமையை கையாள்கிறவர்களை அரசு இயல் அறிவுக்கு அப்பாற்பட்டு பேரன்போடும் சகிப்போடும் அணுகப்பழகிவிட்ட அறியாமையை யாருக்கும் பெருமையான ஒன்றாகக் கருதிக் கொண்டாட முடியாது. எனவே தான் பிம்பங்கள் குறித்த உரையாடலை போலி நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்து தொடங்க வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று புனித பிம்பங்களை உடைத்தெறிவது. நமக்கு மிக நெருக்கமானதும் அனைவராலும் கேள்விக்கு உள்ளாக்கப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் மிகுந்த மிகை உணர்ச்சியால் கட்டப்பட்டதுமான தாய் எனும் புனிதப் பிம்பம்.

பெற்ற தாயும் தந்தையும் போற்றுதலுக்குரியவர்கள் என்பதில் எதிர்க் கருத்தில்லை. இந்தியப் பெற்றோர் குறிப்பாக, தென்னிந்திய பெற்றோர்களின் தன்மை, பிள்ளைகளுக்காக தமது தனிப்பட்ட வாழ்க்கை என்கிற ஒன்றை மறந்து தத்தமது அளவிலான தியாகங்களை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டால் குடும்பம் என்கிற அமைப்பையே நிலைநிறுத்துகிறது

ஆனாலும் பெண்களுக்குரிய பாதுகாப்பை, சகஜீவியாய் அவர்களுக்கான சமத்துவத்தை வழங்காமல் போலியான புனிதப்படுத்துதலை மட்டும் காட்டி அப்புனிதப்பிம்ப வெளிச்சக்கீற்றின் பின்னால் பேரண்ட இருட்டில் அவர்களுக்கான உரிமைகளை இருட்டடிப்பு செய்யும் சமூக அநீதி, தாய்மை என்னும் உயர்வு நவிற்சியால் சமன் செய்யப்படுகிறது.

பெண்ணை பெண்ணாக, எல்லா உணர்வுகளும், உணர்ச்சி ஏற்றத் தாழ்வுகளும் இருக்கும் இயல்பினளாக சக மனித  உருவாக பார்க்கத் தவறிவிட்டு போலியான பிம்பத்தை முன்னிறுத்துவதால் என்ன பயன்? அந்த பிம்பம் போலியானது என்கிற புரிதல் எல்லாப் பெண்களுக்கும் இருக்கிறதா? இருந்தாலும் அதை அவர்கள் நம்புகிறார்கள். விரும்புகிறார்கள். போற்றிப் பாதுகாக்க முனைகிறார்கள் என்பதுதான் துயரம்.

தொண்ணூற்றி ஒன்பது விழுக்காடு சகமானுட உயிராக வாழ அனுமதிமறுக்கும் தடைகளை, ஒரு விழுக்காடு புனிதப்படுத்துதலால் மறைத்து எழுப்பப்பட்ட பிம்பமாக பெண்ணை நம்பச் செய்யும் பேராபத்தை கேள்விகளின்றி ஏற்று வாழப்பழகும் அபாயத்தை இயல்பு நலனாக விதைக்கின்றன இத்தகைய பிம்பங்கள்.  இதன் தொடர்ச்சியே தாய் எனும் பிம்பத்தை முன்னிறுத்திய அதிநாயக பிம்பமான எம்.ஜி.ஆர் சந்தேகத்துக்கிடமின்றி நடுத்தர வர்க்க, அடித்தள வர்க்கத்தினரால் முழுமையாக சுவீகரிக்கப்பட்டு இதய தெய்வமாக ஏற்கப்பட்டதும், அமெரிக்க மருத்துவமனையிலிருந்தபடியே மீண்டும் தமிழக முதலமைச்சராக அமர்ந்ததும் நடந்திருக்கிறது

குடும்பம் என்கிற அமைப்பின் உண்மை முகம் அசலானதாக கண்முன்னே இருக்கிறபோது, திரை நாயகனையே தானாகவும், தனக்கு எல்லாமுமானவராகவும் ஏற்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்வித மனத்தடையும் இல்லாமல் செய்கிறது அந்த புனிதப்படுத்தப்பட்ட பிம்பம். ஆகவே அந்த நாயகன், சாமானிய ஆண்களும் பெண்களும் கனவுலகில் சஞ்சரிக்கத் துணை நிற்பவராகவும், மானுடப்பிறப்பிற்கு அப்பாற்பட்டவராகவும் உள்வாங்கப்படுகிறார்

இதனடிப்படையிலேயே எம்.ஜி.ஆரும், தன்னை நம்பி நேசித்த மக்களின் மாய மயக்கங்களை தெளிவித்து ஓர் அறிவார்ந்த சமூகத்தை வளர்த்தெடுக்கும் பொறுப்புக்குள் தன்னை பொருத்திக்கொள்ள  முயலவில்லை. அதற்கான யத்தனிப்பு அவரிடம் இருந்ததற்கான சான்றுகளே தென்படவில்லை. மக்களிடம் பரவியிருந்த தன் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளவே அவர் முனைந்திருக்கிறார். எனவே பிம்ப அரசியலே அவரால் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. திரைப்படத்தால் உருவாக்கிக் கொண்டதை அரசியலுக்கும் கடத்தி தக்க வைப்பதில் முழு மூச்சோடு செயல்பட்டிருக்கிறார்.

அவரைப் பின்பற்றி வந்த ஜெயலலிதாவுக்கும் அது எளிதில் கைவரப்பெற்றது. துணிச்சல்காரர், தைரியமான பெண்மணி என்கிற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டார். எனவே தான் இங்கு ஆட்சித் தலைமையை ஏற்பவருக்கு நிர்வாகத்திறமை இருக்கிறதோ இல்லையோ ஆளுமை இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஏனைய மாநிலங்களில் பார்வைக்கு எளிய தோற்றம் கொண்டவரும் சிறந்த நிர்வாகத்தை தரமுடிகிறது. இங்கே பிம்பங்களை நிலைநிறுத்தியதிலும், தமிழ்ச்சமூகத்தின் உணர்ச்சிமிகுதிக்கு நீர் வார்த்து வசப்படுத்தியதிலும், திரைப்படம் பெரும் பங்காற்றியிருக்கிறது.

எனவே தனது படங்களின் மூலமாக தாய்ப் பிம்பபோற்றுதலை வலிமைப்படுத்தி தனது ரசிகர்களை வாக்குவங்கியாக்கிக் கொள்வது எம்.ஜி.ஆருக்கு எளிதாகிவிட்டது. தாய் எனும் பிம்பம் எம்.ஜி.ஆர், தெய்வப்பிறவி எனும் பிம்பத்தை உருவாக்கியிருக்கிறது.

தாய் எனும் உயர்வு நவிற்சியே ஜெயலிதாவை ஊழலும், அதிகார அத்துமீறலும்  நிறைந்த தலைவர் என்பதிலிருந்து காத்துஅம்மாவாக பரவலாக்கும் நிலையை சாத்தியப்படுத்தியது

உயர்வு நவிற்சியும் அதற்குள் சிக்கவைக்கப்பட்டு மூழ்கடிக்கப்படும் உண்மை நிலையும் என்கிற முரணோடு நகர்கிறது தமிழர்களின் வாழ்க்கை

எடுத்துக்காட்டாக, மீனவ நண்பன்,படகோட்டி என நடித்து அவர்களுக்காக பாட்டுப்பாடி உதடசைத்த எம்ஜிஆர் ஆட்சியில் மெரினாவில் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. மீனவர்களின்  திரை நண்பனால் மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். விவசாயியாக நடித்த எம்.ஜி.ஆர், ஆட்சியில் தான் விவசாயிகள்  மாநாடு நடத்திய விவசாய  சங்கத்தலைவர் நாராயண சாமியை ஓட ஓட விரட்டி அடித்ததும் நடந்தது.

1983ல் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலை கண்டித்து தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவு பெருகியது. போராட்டங்கள் தீவிரமாக நடத்தப்பட்டது..தனது ஆட்சிக்கு அது தலைவலியாக மாறுவதை உணர்ந்த எம் ஜி ஆர் போராட்டக்காரர்களை கடுமையாக  ஒடுக்கினார். திருச்சியில் தமிழீழ ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஓர் அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஏற்றிக் கொன்றார்.அது ஓட்டுநரின் தனிமனித தவறாக மனநிலை பிறழ்வாக காட்டப்பட்டது.விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்கிற செய்தியை மேலோங்க செய்து போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டது மிக லாவகமாக மறக்கடிக்கப்பட்டது       

புரட்சித் தலைவர் என்று தன்னை அழைக்க செய்த எம் ஜி ஆரின் ஆட்சிக்காலத்தில் தான், வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் உழைக்கும் மக்களுக்காக ஆயுதம் தாங்கிப் போராடிய போராளிகள் கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.காவல்துறை அதிகாரி தேவாரம் தலைமையிலான காவல்படை, 11 வயது முதல் 70 வயது வரையிலான 370 பேரை சுட்டுக்கொன்றதாக அந்த சமயத்தில் வெளியான ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏழை மக்களுக்கு ஆதரவாகவும் கூலித்தொழிலாளிகளை கொடுமைப்படுத்திய சுரண்டல்வாதிகளுக்கும்,பண்ணையார்களுக்கும்,முதலாளிகளுக்கும் எதிராக போராடியவர்களை சுட்டுக்கொன்றோம் என்று தேவாரமே குறிப்பிட்டுள்ளார்.தேவாரத்தை இந்த நடவடிக்கைக்கு நியமித்தவர்        எம் ஜி ஆர். அவர் தான் புரட்சித்தலைவர் எனும் பிம்பம்.   

புரட்சியின் மூலம் மக்கள் விடுதலையை சாத்தியப்படுத்தும் முனைப்போடு தன்னலம் துளியுமின்றிப் போராட்டத்தை முன்னெடுத்த உண்மையான புரட்சியாளர் தமிழரசனை கல்லால் அடித்துக் கொன்ற காவல் துறையை தன் வசம் வைத்திருந்தவரே,மக்கள் போராளிகளை சுட்டுக்கொல்ல படை அனுப்பியவரே  புரட்சித் தலைவர் என்றழைக்கப்பட்டது உயர்வு நவிற்சிக்கும் உண்மை நிலைக்குமான முரண்

எனவே தான் ஆட்சியும் அரசியலும் முழுமையான புரிதலுக்கு உட்படுத்திவிட முடியாத ஒன்றாக, அச்சத்தோடும் வியப்போடும் விதந்தோதுகிற ஒன்றாக பெரும்பான்மையால் ஏற்கப்படுவதற்கு அத்தனை ஊடகங்களும் உறுதுணை செய்கின்றன. சினிமாவும் தன்னளவில் அதற்கு பயன்பட்டிருக்கிறது. எப்படி பிம்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றனவோ அவ்வாறே அரசியலும் ஆட்சியும் ஏற்றுக்கொள்ளப்படும் சமூகத் துயரம் நிகழ்கிறது.  

எளிய மனிதர்கள், தாம் நம்பிவிட்ட ஒன்றை, அது பொதுச் சமூகத்துக்கு எத்தனை கேடுகளை உருவாக்கக் கூடியதாக இருந்தாலும் அதன் மீதான அபிமானத்தை அத்தனை எளிதில் கைவிடமுடியாதவர்களாக வார்க்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆட்சித் தலைமையிலிருந்தவர்கள் என்பதை தவிர, குடிமக்கள் உடன்கட்டை ஏறுவதற்கான எந்த நியாயமுமில்லாதபோது ஊழல்மிகுந்த தலைமை நோய்வாய்ப்பட்டு இறந்தாலும் கூட அம் மரணத்திற்காக உயிர் நீத்த தொண்டர்களின் கணக்கை உயர்த்திக் காட்டியேனும் பிம்பத்தை தக்கவைக்கும் முயற்சி நடந்து கொண்டேயிருக்கிறது. அவர்களை மன்னித்து தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும் சமூகமாக பொதுச் சமூகம் உருவாகி நிற்கிறது. பிம்ப அரசியலின் போற்றுகை தந்த சீரழிவு இது

இவ்விடத்தில் மேலைநாடுகளின் போலித்தன்மையற்ற வாழ்க்கை முறை, குடும்ப அமைப்பு, அரசியல் நிலைப்பாடு ஆகிறவற்றை ஒப்பு நோக்க வேண்டும். வளர்ந்த நாடுகளில்,குடும்பம் சமூகம் அரசியல் மூன்றும் ஒன்றையொன்று பிணைக்கும் காரணிகளாகவும் அதன் கூட்டு விளைவாக நாட்டு நலனைத் தீர்மானிக்கும் கருவிகளாகவும் இருப்பதை அவதானிக்க முடிகிறதுஇங்கே நம்மை நோக்கி மேலும் மேலும் பிம்பங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பெரும்பான்மையும் அதற்குள் சிக்கி வெளிவர முடியாத நிலைப்பெற்றிருக்கிறது

மதிப்பீட்டுச் சிக்கல்களுக்குள் அமிழ்ந்து, ஆய்ந்து தெளிய விரும்பாத சமூகத்தினராக தமிழ்நாட்டினர் அடையாளம்  கண்டுக் கொள்ளப்பட்டிருப்பதன் விளைவே  ரஜினி,கமல்,விஜய்  எனும் பிம்பங்கள்  களமிறக்கப்படுதலின் பின்னணி

பிம்பங்களின் மெய்த்தோற்றம் தலைகீழானது என்பதற்கு எம்ஜிஆர்,ஜெயலலிதாவை  தொடர்ந்து கூடுதல்  சான்றாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.ஆட்சியில் இருக்கும் எவருக்கும் அவர்கள் மக்கள் விரோதிகளாகவே  இருந்தாலும்  சாமரம் வீசத் தயங்காதவர். அவரைத் தொடர்ந்து இப்போது விஜய் வருகிறார்.

எம்ஜிஆரை முன்வைத்து தொடங்கி, தொடர்ந்து திரைப்பிம்பத்தை உருவாக்கித் திணித்ததன் தொடர் முயற்சி இது. தமிழகத்திற்கென்று உறுதியான தலைமை உருவாகிவிடக் கூடாது என ஒரு மோழைத் தலைமையை உருவாக்கும் தந்திரம். இந்த தந்திரத்தை இங்கு செலுத்திப் பார்க்கும் துணிவைத் தந்தது வெள்ளித்திரையின் விளைவே

எனவே திரை ஊடகம் அவ்வப்போது மக்களுக்குப் பயன்படும் உள்ளடக்கங்களோடு வெளிப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் தமிழ்ச்சமூகத்துக்கு எதிராகவே வினையாற்றி வந்திருப்பதை மறுக்க முடியாது

மக்களுக்கான ஊடகமான வெள்ளித்திரையில் இனியேனும் மக்கள் அரசியல் பேசப்பட வேண்டும். அதற்கான தருணம் முகிழ்த்திருக்கிறது. அத்தகைய படைப்பாளிகள் உருவாகியிருக்கிறார்கள். ஆயினும் பிரிட்டிஷ் அரசின் தணிக்கைத்துறை இன்னும் இங்கிருந்து அகலவில்லை எனும் அளவுக்கு இந்தியத் தணிக்கைத்துறை முந்தி நிற்கிறது. ஆபாசம், வன்முறை தவிர கருத்துச் சுதந்திரத்தின் உரிமைக்கு உரிய இடம் அளிக்கப்படுமானால் பிம்பங்களைத் தகர்த்தெறிந்து மக்கள் விடுதலையை சாத்தியப்படுத்தும் கருவியாக திரைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு வெள்ளித்திரை நல்ல விளைவுகளை தருகிற விடுதலையின் விளைநிலமாகும் என்பதில் ஐயமில்லை

8 thoughts on “பிம்பங்களின் அரசியல் /எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை/பாலமுரளிவர்மன்

  1. அருமை
    இனப்பற்றாளர் ஐயா பாலமுரளி வர்மன் அவர்களுக்கு தமிழினம் கடமைப்பட்டுள்ளது
    சேனாபதி வெ
    செ 91

  2. அருமையான கட்டுரை. நீண்ட வரலாற்றைச் சிறப்பாக எளிய இனிய தமிழில் பதிவு செய்துள்ளார் கட்டுரையாளர் பாலமுரளி வர்மன்.

  3. ஆழமான ஆய்வு! குறிப்பாக எம்.ஜி.ஆர். மீது இன்றுவரை பொது வெளியிலும், திரைத் துறையிலும் கட்டமைத்து போற்றப் படும் நாயக பிம்பத்தின் முகத்திரை கிழித்து அது நடிப்பு பிம்பம் என்பதை ஆதார பூர்வமாக நிரூபிக்கும் கட்டுரை! , அவரின் அடிச் சுவட்டில் முதல்வர் கனவு கண்ட ரஜினியையும் இப்போது வேகமாக கனவு காணும் விஜய்யும் அருமையாக அலசி இருக்கிறீர்கள் இனியாவது திரையரங்குகளில் முதல்வர்களை தேடாத தமிழ் ரசிகர்கள் உருவாக வேண்டும் என்பதே நமது விருப்பம் அருமையான கட்டுரை இனிய வாழ்த்துகள் முரளி!‼️🌺

  4. மிக அருமை இன்றைய தலைமுறைகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights